This Article is From Oct 29, 2019

80 மணி நேர போராட்டம்: அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சுஜித்! - சோகத்தில் தமிழகம்!!

80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. 

80 மணி நேர போராட்டம்: அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சுஜித்! - சோகத்தில் தமிழகம்!!

கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித் (File Photo)

New Delhi:

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 80 மணி நேர போராட்டத்திற்கு பின் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. 

முன்னதாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இரவு 10.30 மணியளவில் இருந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வந்ததாக அவர் கூறினார்.

கடந்த 25-ம் தேதி மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

முதலில் 30 அடியில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் கயிறு கட்டி குழந்தையை மீட்க முயற்சிக்கும் போது அது தோல்வியில் முடிந்தது. இதில், துரதிர்ஷடவசமாக குழந்தை 30 அடியில் இருந்து வேகமாக கீழே சென்று 70 அடிக்கு சென்று மாட்டிக்கொண்டது. 

தொடர்ந்து, முதல் நாளில் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்தது. சுஜித்தின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இதனிடையே, 70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி காணப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து, பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

இதனிடையே, குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது தெரியவந்தது என நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

சுஜித்தின் உடலுக்கு மருத்துவமனையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனை வளாகத்திற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வருகை தந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுஜித்தின் உடல் உடனடியாக நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

.