1998-ல் நடந்த கொலை சம்பவம் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. இதில் சித்து சிறைக்கு செல்வாரா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்
New Delhi: பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு புதிய சிக்கலை 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று தற்போது ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலுக்கு வந்து தற்போது பஞ்சாப் காங்கிரஸில் சித்து அமைச்சராக உள்ளார். கடந்த 1998-ல் சித்துவும், அவரது நண்பரும் பாட்டியாலா என்ற நகரில் கார் பார்க்கிங் செய்தபோது, இன்னொருவருடன் தகராறு செய்துள்ளனர். அதன்பின்னர் சித்துவும் அவர் நண்பரும் தாக்கியதில் இன்னொருவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் சித்துவை விடுதலை செய்தது. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு சென்றபோது சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த 2006-ல் விதிக்கப்பட்டது. இதையடுத்து சித்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அங்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை சஸ் பெண்ட் செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தின்போது சித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.கே.கவுல் ஆகியோர் சித்துவுக்கு எதிராக போதிய சாட்சியம் இல்லை என்று கூறி ரூ. 1000-ஐ மட்டும் அபராதமாக விதித்து விடுதலை செய்தனர்.
இந்த நிலையில், சித்துவால் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நபரின் குடும்பத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் சித்துவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு சித்துவுக்கு சிறை தண்டனை கிடைத்தால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.