This Article is From Apr 18, 2020

ராஜஸ்தானில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க 200 பேருந்துகளை அனுப்புகிறது உத்தரப்பிரதேச அரசு!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 13 ஆயிரத்தை கடந்துள்ளது. 452 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக இன்று 56 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 103 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க 200 பேருந்துகளை அனுப்புகிறது உத்தரப்பிரதேச அரசு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • ராஜஸ்தானில் உ.பி. மாணவர்கள் ஊரடங்கால் சிக்கித் தவிக்கின்றனர்
  • மாணவர்களை மீட்க உத்தரபிரதேச அரசு பேருந்துகளை அனுப்பியுள்ளது
  • மற்ற மாநிலங்களும் மாணவர்களை மீட்டுச்செல்ல ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை
Lucknow:

ராஜஸ்தானில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் தனது மாநில மாணவர்களை மீட்பதற்காக, உத்தரப்பிரதேச அரசு 200 பேருந்துகளை அனுப்பி வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் பிரபல போட்டித் தேர்வு மையங்கள் இயங்கி வருகின்றன. இதேபோன்று பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு பயிற்சிக்கும் கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்கள் பெயர்பெற்றுள்ளன.

இங்கு சேர்ந்து படிப்பதால், அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் இங்கு தங்கி பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 22 நாட்களுக்கும் மேலாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில தொழிலாளர்களைப் போலவே, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் படித்து வரும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் கணிசமாக படித்து வருகின்றனர். அவர்கள் தங்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு தற்போது உத்தரப்பிரதேச அரசு முன்னுரிமை கொடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் 200 பேருந்துகள் மாணவர்களை மீட்பதற்காக ஆக்ராவில் இருந்து கோட்டாவுக்கு புறப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு பேருந்திலும் அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டுமே ஏற்றப்படுவார்கள். பேருந்தில் மாணவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் பாட்டில்கள், மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 'மாணவர்களை மீட்டுச் செல்ல உத்தரப்பிரதேச அரசு பேருந்துகளை அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று மற்ற மாநிலங்களும், அவர்களது மாணவர்களை கொண்டு செல்லலாம்.' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கை ஊரடங்கு நெறிகளுக்கு எதிரானது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். 

மத்திய அரசு மே 3-ம்தேதி வரையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் வேலை பார்ப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் பல மாநிலங்களில் பள்ளித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 13 ஆயிரத்தை கடந்துள்ளது. 452 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக இன்று 56 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 103 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

.