சுனாமி பாதிப்பை நினைவுபடுத்தும் புகைப்படங்களில் ஒன்று.
New Delhi: சென்னையில் சுனாமி ஏற்பட்டதன் 15-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சமூக வலைதளமான ட்விட்டரில் சுனாமி பாதிப்புகளை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் அதிகளவு பகிரப்பட்டன. இதில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
2004-ல் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலை மையப்படுத்தி நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.1 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை, இந்தியா, தாய்லாந்து உள்பட 9 நாடுகளின் கடற்கரையோரங்களில் ராட்சத அலைகள் எழும்பின. இதில் லட்சக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
சுமார் 2 லட்சம்பேர் இந்த கோர சுனாமியில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த 15 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி #Tsunami என்ற ஹேஷ்டேக்கில் ஏராளமான பதிவுகளை ட்விட்டர் பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
ஒரு ட்விட்டர் பயனாளர், '2004 சுனாமியில் உயிரிழந்த 14 நாடுகளை சேர்ந்தவர்களு அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களது ஆத்மா சாந்தி அடையட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு பயனாளர், 'நான் சுனாமியில் தப்பிப் பிழைத்ததால் ட்வீட் செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.
சுனாமியின் கோர தாண்டவ புகைப்படத்தை பதிவிட்டு, 'இந்த இடத்தில் இருந்த என்னுடைய வீடு சுனாமியில் கடந்த 2004 டிசம்பர் 26-ம்தேதி அடித்துச் செல்லப்பட்டது. எங்களுடைய பகுதி எளிதில் இயற்கை சீற்றங்களுக்கு உட்படும் பகுதியாக உள்ளது. இதுவரையில் நாங்கள் பாடம் பெறவில்லை' என்று கூறியுள்ளார்.
ஒரு பதிவில், இலங்கையில் எற்பட்ட பாதிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 'இலங்கையில் மட்டும் 35,322 பேர் உயிரிழந்தனர். 21,411 பேர் காயம் அடைந்தனர். 8 லட்சம் பேர் தங்களது இருப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தளவில் 2004 சுனாமியில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தவர்கள் இன்றைக்கு நினைவு கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
சுனாமியை நினைவுபடுத்தி ஒரு பயனாளர், 'நம்மால் மறக்கவே முடியாது... 2004 டிசம்பர் 26-ம்தேதி என்பது வரலாற்றில் கறுப்பு நாள். ஆயிரக்கணக்கானோர் சுனாமியால் தங்களது உயிரை இழந்தனர். அப்போது நான் கன்னியாகுமரியில் இருந்தேன். அதிர்ஷ்டத்தால் உயிர் பிழைத்தேன். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்' என்று கூறியுள்ளார்.
'கடலே, கோடிக்கணக்கான முறை உனது அலை வந்து என் காலில் விழுந்தாலும் நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன். ' என்று ஒரு பயனாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம், பல்வேறு இடங்களில் சுனாமி நினைவு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆசெ மாகாணத்தில் மட்டும் 1.25 லட்சம்பேர் உயிரிழந்தார்கள். தாய்லாந்து, இலங்கையிலும் நினைவுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.