This Article is From Jan 07, 2020

'இந்தியாவின் மகள்களுக்கு நீதி கிடைக்கும்' : நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி!!

குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை, நீதியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நிர்பயாவின் தாயார் கூறியுள்ளார். தனது மகளுக்கும், இந்தியாவின் மகள்களுக்கும் நீதி கிடைக்கும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டபோதிலும், அதனை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

New Delhi:

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் வரும் 22-ம்தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள நிர்பயாவின் தாயார், இதன் மூலம் தனது மகளுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் மகள்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

23 வயதான மருத்துவ மாணவி கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதி ஓடும்பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு பேருந்திலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

நீதிமன்ற உத்தரவு குறித்து, நிர்பயாவின் தாயார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், 'நீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு நீதியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. எனது மகளுக்கு நீதி கிடைக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து மகள்களுக்கும் நீதி கிடைக்கும்.' என்று தெரிவித்தார்.

 நிர்பயாவின் தந்தை கூறுகையில், 'நீதிமன்றத்தின் முடிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜனவரி 22-ம்தேதி காலை 7 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள். இந்த முடிவு கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும்' என்று குறிப்பிட்டார். 

டிசம்பர் 12, 2012 அன்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, பலத்த காயம் அடைந்திருந்த நிர்பயா டிசம்பர் 29, 2012 அன்று உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டிருந்த நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பலன் ஏற்படவில்லை. 

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்திருந்தது. குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன. 

இதற்கிடையே குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், 'சீராய்வு மனு என்பது கோரிக்கையை மீண்டும் கேட்பது என்று கரத முடியாது' என்று தெரிவித்தது. முன்னதாக 3 பேரின் சீராய்வு மனுவை காரணம் காட்டி 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, குற்றவாளி அக்சய் சிங் தொடர்ந்த மனுவை நிராகரித்தது. 

இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளுக்கு எதிராக அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடும்போது,'மனிதத்தன்மை அற்ற குற்றங்கள் உள்ளன. அவற்றில் இந்த பலாத்கார சம்பவமும் ஒன்று. அது நடந்த தினத்தன்று, அப்பாவி பெண்ணை காப்பாற்ற முடியாமலும், குற்றவாளிகளான இந்த 5 அரக்கர்களை படைத்ததற்காக வேண்டியும் கடவுள் வெட்கித் தலை குனிந்தார்' என்று கூறினார். 

குற்றவாளிகள் 4 பேரும் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பாக அவர்களை தூக்கிலிடுவதற்கான தயாரிப்புகளை அதிகாரிகள் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். 18 வயதுக்கு உட்பட்ட அவர், சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளி ராம் சிங், சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது மீதம் உள்ள 4 பேர் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளவுள்ளனர். 

இந்த வழக்கில் குற்றவாளிகள் மறு சீராய்வு மனுக்களை பலமுறை தொடர்ந்தனர். அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. 

டெல்லி நீதிமன்றம் மரண தண்டனைக்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது உத்தரவு வெளியாகி உள்ளது. 
 

.