குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.
New Delhi: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் மருத்துவ மாணவி நிர்பயா கொல்லப்பட்டார். இந்த நிலையில் குற்றவாளிக 4 பேரும் எதிர்வரும் 22-ம்தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டிலிருந்து தூக்கு நிறைவேற்றும் பணியாளர் வரவுள்ளார். ஒரே நேரத்தில் நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்காக பீகார் மாநிலம் பக்சார் சிறைச்சாலையில் இருந்து பிரத்யேக தூக்கு கயிறுகள் கொண்டு வரப்படவுள்ளது. இங்கிருந்து கொண்டு வரப்பட்ட கயிற்றில்தான் நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு 2013-ல் தூக்கிலிடப்பட்டார்.
குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு முன்னோட்டமாக, மாதிரி சோதனை அடிப்படையில் மணல் மூட்டைகள் தூக்கிலிடப்பட்டன. ஆசியாவின் மிகப்பெரும் சிறைச்சாலையான திகாரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
குற்றவாளிகள் இருக்கும் அறை முழுவதும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறைச்சாலையில் உள்ள அறை எண் 3-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.
டிசம்பர் 12, 2012 அன்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, பலத்த காயம் அடைந்திருந்த நிர்பயா டிசம்பர் 29, 2012 அன்று உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டிருந்த நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பலன் ஏற்படவில்லை.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்திருந்தது. குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன.
இதற்கிடையே குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், 'சீராய்வு மனு என்பது கோரிக்கையை மீண்டும் கேட்பது என்று கரத முடியாது' என்று தெரிவித்தது. முன்னதாக 3 பேரின் சீராய்வு மனுவை காரணம் காட்டி 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, குற்றவாளி அக்சய் சிங் தொடர்ந்த மனுவை நிராகரித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளுக்கு எதிராக அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடும்போது,'மனிதத்தன்மை அற்ற குற்றங்கள் உள்ளன. அவற்றில் இந்த பலாத்கார சம்பவமும் ஒன்று. அது நடந்த தினத்தன்று, அப்பாவி பெண்ணை காப்பாற்ற முடியாமலும், குற்றவாளிகளான இந்த 5 அரக்கர்களை படைத்ததற்காக வேண்டியும் கடவுள் வெட்கித் தலை குனிந்தார்' என்று கூறினார்.
குற்றவாளிகள் 4 பேரும் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பாக அவர்களை தூக்கிலிடுவதற்கான தயாரிப்புகளை அதிகாரிகள் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். 18 வயதுக்கு உட்பட்ட அவர், சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளி ராம் சிங், சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது மீதம் உள்ள 4 பேர் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளவுள்ளனர்.