This Article is From May 23, 2019

“தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்!”- தமிழிசை ஆதங்கம்

"எங்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் கோபம் இல்லை"

“தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்!”- தமிழிசை ஆதங்கம்

"ங்களை நாங்கள் ஆத்ம பரிசோதனை செய்யும் கட்டத்தில் இருக்கிறோம்"

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற உள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தமிழிசை, “பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதால் தொங்கு நாடாளுமன்றம் அல்ல, தங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. தமிழக மக்கள், பாஜக-வுக்கு வாக்களிக்காதது வருத்தம்தான். ஆனால், பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தமிழக மக்கள் வருந்துவார்கள். 

எங்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் கோபம் இல்லை. எங்களை நாங்கள் ஆத்ம பரிசோதனை செய்யும் கட்டத்தில் இருக்கிறோம். 

தூத்துக்குடியை பொறுத்தமட்டில், இத்தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதற்காக விரிவான பட்டியலைக் கூட நான் தயாரித்து வைத்துள்ளேன். நான் அங்கிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்வேன். தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். அங்கு தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என்பதுதான் எனது கருத்து. அதே நேரத்தில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். 

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பாஜக வலுப்பெற வேண்டும். வருங்காலத்திலாவது மக்கள் எங்கள் நல்ல தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். 

எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம், தொடர்ந்து செய்யப்பட்டு வந்த எதிர் பிரசாரம். நல்ல திட்டங்கள் கூட தவறான திட்டங்களாக சொல்லப்பட்டன. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பது வருத்தம்தான். எதையும் கடந்து வருவதுதான் நல்ல அரசியல் தலைவருக்கு அழகு.” என்று விரிவாக பேசினார்.


 

.