This Article is From May 14, 2019

மழை பெய்தால் ராடாரில் இருந்து விமானங்கள் மறைந்துவிடுமா மோடி ஜி? ராகுல் கிண்டல்!

அக்ஷய் குமாருடனான பேட்டியில், பிரதமர் மோடி சிறு வயதில் தனக்கு மாம்பழங்கள் மீது மிகுந்த விருப்பம் இருந்தது என்றும் தற்போதும் அதனை விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார், இதனையும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

மழை பெய்தால் ராடாரில் இருந்து விமானங்கள் மறைந்துவிடுமா மோடி ஜி? ராகுல் கிண்டல்!

மோடியின் அக்ஷய் குமாருடனான அரசியல் அல்லாத நேர்காணல் குறித்தும் ராகுல் விமர்சித்தார்.

New Delhi:

பாகிஸ்தானின் பால்கோட் தாக்குதலின்போது, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ராடாரில் இருந்து தப்பித்து வருவதற்கு மேகங்கள் உதவின என பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதை குறிப்பிட்டு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலுக்காக மத்திய பிரதசேத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் எப்போது மழை பெய்தாலும், ராடாரில் இருந்து அனைத்து விமானங்களும் மறைந்துவிடுமா மோடி ஜி, என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியுடன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடத்திய நேர்காணலை குறிப்பிட்ட அவர், அதில் பிரதமர் மோடி சிறு வயதில் தனக்கு மாம்பழங்கள் மீது மிகுந்த விருப்பம் இருந்தது என்றும் தற்போதும் அதனை விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார், மோடி ஜி எங்களுக்கு மாம்பழங்கள் எப்படி சாப்பிட வேண்டும் கற்றுக்கொடுத்தவிட்டீர்கள். தற்போது, வேலை இல்லாத இளைஞர்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பால்கோட் தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தாக்குதலின்போது, "திடீரென காலநிலை மோசமாகி, மேகங்கள் சூழ்ந்தன. மழை பெய்யும் நிலை இருந்தது. இதனால் தாக்குதல் நடத்த முடியுமா என சந்தேகம் ஏற்பட்டது.

காலநிலையை காரணம் காட்டி தாக்குதலை ஒத்திவைக்க வேண்டும் என என்னிடம் கோரினார்கள். தேதியை மாற்றினால் இரு விஷயங்கள் பிரச்சினையாகும் என்று எனக்கு உணர்த்தின. ஒன்று ரகசியம், இரண்டாவது. ஏராளமான மேகக்கூட்டமும் மழையும் பெய்து வருகிறது. நான் அறிவியலில் சிறந்த ஒருவன் இல்லை. இருந்தாலும், அது நமக்கு உதவும் என்று என்னுடைய அறிவுக்கு உணர்த்தியது. பாகிஸ்தான் ராடாரில் இருந்து நமது விமானங்கள் தப்பிக்க மேகக்கூட்டங்கள் இருந்தன. ஆதலால் தாமதிக்காமல் புறப்படுங்கள் என்று கூறினேன்" என மோடி கூறினார்.

இதனையடுத்து ரேடார் அடிப்படையை தத்துவம் கூட தெரியாதவராக நமது பிரதமர் இருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமருக்கு இது கூட தெரியவில்லை என்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இதனிடையே, பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பு ரகசியம் குறித்து வெளிப்படையாக பேசியதாக தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி புகார் தெரிவித்திருந்தார்.

.