বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 23, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வு; 681 பேர் உயிரிழப்பு!

Coronavirus: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,409 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

Coronavirus: இதுவரை 4,258 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Highlights

  • கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21,393 ஆக உயர்வு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,409 பேருக்கு பாதிப்பு
  • மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 21,393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,409 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 4,258 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து, அதிகரித்து வரும் நிலையில், பரவல் வேகம் குறைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் மார்ச்.25ம் தேதி முதல் மே.3ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியதற்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு 3.4 நாட்களில் இரட்டிப்பாகி வந்த கொரோனா பரவல் எண்ணிக்கை, தற்போது 7.5 நாட்களாக அதிகரித்துள்ளது. இது முற்றிலும் சாதகமான சூழலல் என சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

ஏப்.2ம் தேதி 211 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 430 மாவட்டங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கையில் 6 முக்கிய நகரங்களில் மட்டும் 45 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகமதாபாத்தில் 1,298 பேர்ரும், புனேவில் 660 பேரும், ஜெய்ப்பூரில் 537 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்தவை ஆகும். 

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும்.

மேலும் ஆறு மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதற்காக அவரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலை பெற்ற பின்னர் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களும், மற்றும் களத்தில் இருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் நாடு முழுவதும் மக்கள் நன்றி தெரிவித்து வரும் அதே நேரத்தில், ஒரு சிலர் அவர்கள் வைரஸைப் பரப்புகிறார்கள் என்று நினைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

மருத்துவர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற வகையில், 120 ஆண்டுகள் பழமையான தொற்றுநோய் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement