பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். (PTI)
ஹைலைட்ஸ்
- பஞ்சாபின் குர்டாஸ்பூரில் விபத்து ஏற்பட்டுள்ளது
- விபத்தால் பட்டாசு ஃபேக்ரடி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது
- மீட்புப் படையினர், சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்
Gurdaspur, Punjab: பஞ்சாப் குர்டாஸ்பூரில் இருக்கும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று மிகப் பெரும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 4 மணி அளவில், குர்டாஸ்பூரின் அதிக மக்கள் தொகை கொண்ட இடத்தில் அமைந்துள்ள படாலா பகுதியின் பட்டாசு தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.எஸ் பார்மர் கூறியுள்ளார்.
இந்த விபத்தினால், பட்டாசு தொழிற்சாலை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அருகிலிருந்த கட்டடங்கள் பலவும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெடி விபத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக இந்த பட்டாசு தொழிற்சாலை எந்தவித அனுமதியுமின்றி இயங்கி வருவதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “எங்கள் பகுதியில் இந்த பட்டாசு தொழிற்சாலை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. உள்ளூர் நிர்வாகத்திடம் அந்த தொழிற்சாலை குறித்து பல முறை புகார் தெரிவித்துவிட்டோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைப் போன்ற ஒரு விபத்து 2017 ஆம் ஆண்டும் நடந்து, அதில் ஒருவர் உயிரிழக்கவும் செய்தார்” என்று வருத்தப்படுகிறார்.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். குர்டாஸ்புர் எம்.பி-யான சன்னி டியோல், “படாலா ஃபேக்டரியில் நடந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன். மிகவும் வருத்தமளிக்கிறது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்” என்று ட்வீட்டியுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மூத்த போலீஸ் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
PTI மற்றும் IANS தகவல்களுடன்