New Delhi: ஈரான் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், பல வாரங்களாக சிக்கித் தவித்தனர். இந்நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுவராஜ், ‘ஈரான் நாட்டின் நாகிதாகியில் சிக்கியிருந்த 21 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரானில் இருக்கும் இந்திய தூதரகத்தாலும், பாந்தர் அப்பாஸில் உள்ள தூதரகத்தாலும் அவர்கள் விடுதலை செய்வது சாத்தியப்பட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.
சென்ற மாதம் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரானில் சிக்கியுள்ள 21 தமிழக மீனவர்கள் குறித்து கடிதம் எழுதினார். அப்போது, வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் அவர்கள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர், பிரதமருக்கு வலியுறுத்தினார்.
இந்நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் சென்னைக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.