குணம் அடைந்தவர்களின் சதவீதம் கடந்த 14 நாட்களில் 13-ல் இருந்து 25.13- ஆக அதிகரித்திருக்கிறது.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைவோரின் சதவீதம் 25.13- ஆக அதிகரித்துள்ளது
- கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் வீதம் 3.2 சதவீதமாக இருக்கிறது.
- கொரோனா பாதித்தோரில் 65 சதவீதம் பேர் ஆண்கள். 35 சதவீதம் பேர் பெண்கள்
New Delhi: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பாதிப்பிலிருந்து குணம் அடைவோரின் சதவீதம் 25.13- ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்தது.
குணம் அடைந்தவர்களின் சதவீதம் கடந்த 14 நாட்களில் 13-ல் இருந்து 25.13- ஆக அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட 33,050 பேரில் 8,324 பேர் சிகிச்சை பலன் அளித்து குணம் அடைந்துள்ளனர். 1,074 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக மாறும் நாட்கள் 3.4-ஆக இருந்தது. தற்போது 11 நாட்களாக பாதிப்பு பரவல் குறைந்திருக்கிறது.
இறப்பு வீதம் 3.2 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள். 35 சதவீதம் பேர் பெண்கள்.
நாடு முழுவதும் பொது முடக்கத்தை ஏற்படாமல் இருந்திருந்தால் இன்று நிலைமை விபரீதமாக மாறியிருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய திட்டக்குழுவான நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறும்போது, 'நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பும் பாதிப்பும் மிக குறைவாக உள்ளதென்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பரவல் இருக்கிறது. ஆனால் பேரச்சம் கொள்ளும் அளவுக்கு பரவல் இல்லை' என்று தெரிவித்தார்.
மே 3-ம்தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மும்பை, சென்னை, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சிவப்பு மண்டலங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை பிரதமர் மோடி ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பெரிய அளவு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்களை கொரோன கதற விட்டுக்கொண்டிருக்கிறது.