ம.பியில் அமைச்சரவை விரிவாக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்களுக்கு அதிக இடம்!
Bhopal: மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியில் 28 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். மத்திய பிரதேசத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் இந்த பதவி பிரமாணத்தை செய்துவைத்தார்.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா அதிக எண்ணிக்கையில் தனது ஆதரவாளர்கள் பெரும்பாலானோருக்கு பதவி கிடைக்க வழிவகை செய்து முத்திரை பதித்துள்ளார். இந்த குளறுபடி காரணமாகவே அமைச்சரவை பதவியேற்புக்கு இவ்வளவு நாளாகியுள்ளது. இந்த அமைச்சரவையில், ஜோதிராதித்யா சிந்தியாவின் அத்தை பாஜகவை சேர்ந்த யசோதா ராஜே சிந்தியாவுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில், சிவ்ராஜ் சிங் சவுகான் கட்சித் தலைமைக்கு பரிந்துரைத்த பலருக்கு பதவி வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்றைய தினம், சலசலப்பு இருக்கும்போது மட்டுமே தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. பகவான் சிவனே விஷத்தை தான் குடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த கருத்தால், புதிய அமைச்சரவையில், அவர் விரும்பியவர்களை தேர்வு செய்ய முடியவில்லை என்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக இன்று காலை முதல்வர் சிவராஜ்சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இன்று பதிவிப்பிரமாணம் ஏற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய பிரதேசத்தில் அபிவிருத்தி மற்றும் பொது நலத்துக்கான நமது பொதுவான இலக்குகளை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் உங்கள் அனைவரின் முழுமையான ஆதரவும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்திய 22 ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து, பாஜகவிடம், காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதைத்தொடர்ந்து, இந்த அமைச்சரவை விரிவாக்கம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் சிவராஜ்சிங் பதவியேற்ற நிலையில், ஏப்ரல் மத்தியில் ஐந்து அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றுக்கொண்டனர். அப்போதிலிருந்து, இத்தனை மாதங்களுக்கு 5 அமைச்சர்களுடனே, ஆட்சி நடந்து வந்தது.