தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வருண்
ஹைலைட்ஸ்
- நேற்று நாடு முழுவதும் யூபிஎஸ்சி தேர்வு நடந்தது
- இது யூபிஎஸ்சி-யின் முதற்கட்டத் தேர்வாகும்
- வருண், டெல்லியில் தங்கி படித்து வந்துள்ளார்
New Delhi: டெல்லியில் இருக்கும் பஹர்கன்ஜ் என்ற இடத்தில் யூபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வு எழுத தாமதமாக சென்றவருக்கு, உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யூபிஎஸ்சி குடிமைப் பணிக்கான முதற்கட்ட தேர்வுகள் நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தத் தேர்வை நாட்டில் இருக்கும் பல்வேறு தேர்வு மையங்களில் எழுதினர். அதில் கர்நாடகாவைச் சேர்ந்த வருண் என்பவரும் ஒருவர். இவர் டெல்லியில் தங்கி, யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வந்துள்ளார். 28 வயதைக் கடந்த இவருக்கு, குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெறுவது தான் கனவாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் இருக்கும் பஹர்கன்ஜ் என்ற இடத்தில் இருக்கும் தேர்வு மையத்தில், பரீட்சை எழுத சென்றுள்ளார் வருண். ஆனால், அவர் தாமதமாக சென்றதால், தேர்வு அறைக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், விரக்தியடைந்த வருண், தன் அறைக்குச் சென்று ஒரு கடிதம் எழுதிய்யுள்ளார். அதில் தன் குடும்பத்திடம், `நான் செய்த தவறுக்கு என்னை மன்னித்துவிடுங்கள். என்னை உங்கள் வாழ்க்கையில் இருந்து மறந்துவிடுங்கள்' என்று உருக்கமாக கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தேர்வுக்குப் பிறகு அவரின் பெண் நண்பர் ஒருவர் வருணை, தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், வருண் போனை வெகு நேரம் எடுக்காததால் அறைக்கு சென்றுள்ளார் அந்தப் பெண் நண்பர். அப்போது, வருண் தன் அறையில் இருக்கும் சீலிங் ஃபேனில் தூக்கிட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் இது குறித்து போலீஸுக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், வருண் அறையின் கதவை உடைத்து அவரின் உடலை மீட்டுள்ளனர். வெகு நாள் கனவான யூ.பி.எஸ்.சி தேர்வை எழுத முடியாமல் போனது தான் வருணின் இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.