This Article is From Oct 13, 2018

‘பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன..!’- ஃபேஸ்புக் அதிர்ச்சித் தகவல்

ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 9 கோடி பயனர்களின் கணக்குகளின் தரவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

‘பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன..!’- ஃபேஸ்புக் அதிர்ச்சித் தகவல்

கடந்த மாதம் இந்த ஹேக்கிங் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டது

ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 9 கோடி பயனர்களின் கணக்குகளின் தரவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் சென்ற மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அப்படி ஹேக் செய்யப்பட்டதில் 2.9 கோடி கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தற்போது அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது. 

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஒரு புதிய பக்-ஐ ஹேக்கர்கள் உருவாக்கியதன் மூலம், 1.5 கோடி பயனர்களின் பெயர், போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை திருடியுள்ளனர். இதுவல்லாமல், 1.4 கோடி பயனர்களின் கணக்குகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்து வரும் இடம், பிறந்த தேதி உள்ளிட்ட மிகவும் சென்சிட்டிவ் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்’ என்று விளக்கம் அளித்துள்ளது. 

ஃபேஸ்புக் சம்பந்தப்பட்டுள்ள இந்த விவகாரம் உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுடன் பிரச்னையை சரி செய்ய ஃபேஸ்புக் முயன்று வருகிறது. புலனாய்வு அமைப்புகள், ஃபேஸ்புக் நிறுவனத்திடம், யார் இந்த ஹேக்கிங்கில் ஈடுபட்டது என்று தெரிந்தாலும சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. 

அமெரிக்காவில் விரைவில் மிட்-டர்ம் தேர்தல்கள் நடக்க உள்ளன. அதை குறிவைத்துத் தான் இந்த ஹேக்கிங் நடந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், ஹேக்கர்களின் நோக்கம் என்னவென்பது குறித்தும் தெளிவு இல்லை என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. 

ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, பல ஆப்களில் லாக்-இன் செய்ய முடியும். அப்படி செய்யும் போது, இந்த ஹேக் நடந்துள்ளதா என்ற கோணத்திலும், இவ்விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளான வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், மெஸெஞ்சர் போன்ற தளங்கள், இந்த ஹேக்கால் பாதிப்பு அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தான் கூகுள் நிறுவனம், அதன் கூகுள் ப்ளஸ் தளத்திலிருந்து 5 லட்சம் கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சி அளித்தது. தற்போது ஃபேஸ்புக் நிறுவனமும், ஹேக்கிங் விவகாரத்தில் சிக்கியுள்ளதால், டெக் நிறுவனங்கள் மீதான அழுத்தம் அதிகமாகியுள்ளது. இதை சரிகட்ட அமெரிக்கா, விரைவில் ஒரு சட்டம் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.