This Article is From Oct 26, 2019

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: 15 மணி நேரமாக மீட்க நீடிக்கும் போராட்டம்!!

ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: 15 மணி நேரமாக மீட்க நீடிக்கும் போராட்டம்!!

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்து வருகிறது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்துள்ளான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகாமையில் மீட்புக்குழுவினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டினர். 

குழந்தையை மீட்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரியும் ஈடுபட்டுள்ளனர். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சி வெளியாகி காண்போரை கலங்கச் செய்கிறது. சுர்ஜித்தின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைக்கு சுவாசிக்க தொடர்ச்சியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் வந்தடைந்தனர். தொடர்ந்து மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றுக்குள் மண் விழுந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குழந்தையின் சத்தத்தைக் கேட்க முடியவில்லை. இருந்தாலும் குழந்தையை பத்திரமாக மீட்போம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, குழந்தையை மீட்கும் பணியில் ஐஐடி குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஐஐடி குழுவினர் கொண்டுவந்த நவீன கருவி மூலம் குழந்தையை மீட்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்
 

.