இ-பாஸ் தளர்வுக்கு பின் சென்னைக்கு 3.25 லட்சம் பேர் வந்துள்ளனர்: மாநகராட்சி ஆணையர் தகவல்!
இ-பாஸ் தளர்வுக்கு பின் சென்னைக்கு 3.25 லட்சம் பேர் வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகள் பொதுமக்கள் வெளியூர், வெளி மாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதலை மீறுவதாகும் எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.
ஆனால், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து, பின்பற்றப்பட்டு வந்தது. இதனிடையே, ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இ-பாஸ் நடைமுறை தமிழகத்தில் எளிதாக்கப்பட்டது. எனினும், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு திரும்பியவர்கள் மீண்டும் சொந்த ஊரில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கில் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும்போது, தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சென்னைக்கு 3.25 லட்சம் பேர் வந்துள்ளனர்.
இப்படி சென்னைக்குள் வந்த அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னைக்கு தினசரி வந்து செல்வோரை கண்காணிப்பது கடினமானது, அதுவும் அடுத்த மூன்று மாதங்கள் நமக்கு கடுமையான சோதனைக் காலமாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து, பேசிய அவர், கொரோனா பரிசோதனைக்கு ஆட்களை பிடித்து வந்தால் பணம் தரப்படும் என்று சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானதாகும். சமூகவலைதளங்களில் இதுபோல மாநகராட்சி குறித்து தவறான தகவல்களை பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், தங்களுக்கு கொரோனா இருப்பதை வெளிப்படையாகக் கூறுவது அசிங்கமானது அல்ல, இதற்காக பொதுமக்கள் கூச்சப்படவோ, அசிங்கப்படவோ தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.