இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்துக் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதன்படி கடந்த 19-ம் தேதி இரவு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, பெரிய அளவிலான கிரேன் ஒன்று அறுந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படக்குழுவைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கோர விபத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் விபத்துக்குக் காரணமான கிரேன் ஆபரேட்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் அதன் நிர்வாகிகள் பலர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, இந்தியன் 2 திரைப்படத்தின் நடிகரான கமல்ஹாசன், மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர், நடிகை காஜல் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த அனைவருக்கும் சம்மன் அனுப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், படப்பிடிப்புக்கான அனுமதி பெற்றதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவினர் நேற்று இரவே இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.