சோபியான் மாவட்டம் வாச்சி பகுதியில் இன்று காலை என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது.
Srinagar: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் முன்னாள் காவலர் ஆவார்.
சோபியான் மாவட்டம் வாச்சி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
தீவிரவாதிகளைக் கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை சரண் அடையுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், பாதுகாப்பு படையினரை எதிர்த்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து என்கவுன்ட்டர் ஆரம்பம் ஆனது.
இந்த சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரது பெயர் ஆதில் அகமது என்பதாகும். அவர், முன்னாள் காவலர். கடந்த 2018-ம் ஆண்டின்போது, அப்போதைய வாச்சி எம்.எ.ஏ. அய்ஜாஸ் அகமது மிரின் ஜவகர் நகர் இல்லத்திலிருந்து 7 ஏ.கே. ரக துப்பாக்கிகளை தீவிரவாதிகள் திருடிச் சென்றனர். அவர்களில் இந்த ஆதிலும் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மற்ற இரு தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.