தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Chamoli, Uttarakhand: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில், ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழையால் வடமாநிலங்கள், தென்மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாடு முழுவதும் இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக வீடு ஒன்று இடிந்து விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட்டில் சமோலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில், ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் இடிந்து தரைமட்டமான வீட்டில், ரூபா தேவி 35, அவரது 9 மாத குழந்தையும் இருந்துள்ளனர். வீடு இடிந்து விழும் நேரத்தில் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், மற்றொரு சம்பவத்தில் 21 வயது பெண் ஒருவர் அவரது வீட்டில் இருந்த போது, ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது வீடு இடிந்து விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து, லேசான மழை பெய்து வருவதால் இப்பகுதியின் நிலைமை மோசமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பல நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
(With inputs from ANI, PTI)