This Article is From Mar 27, 2020

கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், பல பள்ளிகள் அடுத்த மாதம் முதல் கல்விக்கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளன.

கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

ஹைலைட்ஸ்

  • கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வேண்டும்
  • ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.
  • 3 மாத காலம் முடிவடைந்தவுடன் கடன் தவணை மீண்டும் தொடங்கும்.

கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்கும்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 

இதன்காரணமாக நாட்டில் அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. மேலும்,  மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன. 

அந்தவகையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் 3 மாதத்திற்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை. எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.

இதுதொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் காரணமாக அனைத்து வகை கடன்களுக்கான மாதாந்திர  தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருக்கிறார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

கடன் தவணை ஒத்திவைப்பு குறித்த ரிசர்வ் வங்கி ஆளுனரின் அறிவிப்பு மிகவும் தெளிவாக உள்ளது. பொதுத்துறை, தனியார் துறை சார்ந்த அனைத்து வணிக வங்கிகள், மண்டல மற்றும் ஊரக வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கிகளில் பெறப்பட்ட, அனைத்து வகையான கடன் தவணைகளும் அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. 

3 மாத காலம் முடிவடைந்தவுடன் கடன் தவணை மீண்டும் தொடங்கும். அப்போது அந்த மாதத்திற்குரிய தவணையை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஒத்திவைக்கப்பட்ட 3 மாதங்களுக்கான தவணையை செலுத்தத் தேவையில்லை. இதற்கு வசதியாக கடன் தவணைக் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒத்திவைக்கப்பட்ட 3 மாத கடன் தவணைக்காக வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியும், ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்துள்ள பணத்திற்கான வட்டியும் 0.75 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனக்கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடி கணிசமாக குறையும். அதேநேரத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் செய்துள்ள வைப்பீடுகளுக்கு வட்டியை குறைக்க கூடாது.

தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், பல பள்ளிகள் அடுத்த மாதம் முதல் கல்விக்கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளன.  கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள பெற்றோரால் உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது. எனவே, கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்கும்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

.