சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர் தனது 3 வயது மகன் அபினேஷ்வருடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எங்கிருந்தோ வந்த காற்றாடி மாஞ்சா நூல் சிறுவன் அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவனை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் வழியிலே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டம் விட்டதில் சென்னையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தந்தையின் கண்முன்னே மகன் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.