Chennai: சென்னையைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி,வில் அம்பு எய்தல் விளையாட்டில் புதிய கின்னஸ் முயற்சியை செய்துள்ளார். சஞ்சனா என்ற அந்த சிறுமி, 1,111 அம்புகளை, 8 மீட்டர் தொலைவில் இருந்த இலக்கில் செலுத்தியுள்ளர். மூன்றரை மணி நேரத்தில் இந்த சாதனை முயற்சியை செய்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு 5 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக் கொண்ட சஞ்சனா, பெரும்பாலும் இலக்கில் சரியாக அம்பை எய்தார்.
இது குறித்து பேசிய குட்டிச் சுட்டி சஞ்சனா “ நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு எந்த வலியும் இல்லை, சோர்வாகவும் இல்லை. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது கனவு” என்கிறார்.
சஞ்சனா நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று அவரது பயிற்சியாளர் ஷிஹான் ஹுசேனி நம்பிக்கை தெரிவிக்கிறார் “ சஞ்சனாவின் தன்னம்பிக்கை, உடலின் உறுதி மற்றும் கூர்மையான கவனம் தான், அவளை இந்த முயற்சியை வெற்றிகரமாக செய்ய வைத்திருக்கிறது. அவர் ஒலிம்பிக் செல்வதில் எந்த சந்தேகமும் இல்லை. மத்திய மாநில அரசுகள், சஞ்சனாவுக்கு அனைத்து தரமான பயிற்சிகளையும் பெற, உரிய வசதி செய்து தர வேண்டும்” என்றார்.
சஞ்சனாவின் பெற்றோர், அவருக்கு வில் அம்பு எய்தலில் இருக்கும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவரை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த முயற்சிக்காக கடந்த 3 மாதங்களாக, பள்ளி முடிந்ததும், சஞ்சனா பயிற்சி மேற் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த கின்னஸ் முயற்சி எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் நடைபெற்றது. சஞ்சனாவுக்கு ஊக்கம் அளிக்க 200 கல்லூரி மாணவிகள் கூடியிருந்தனர்.
இந்த சாதனை முயற்சி குறித்த தகவல்கள், கின்னஸுக்கு அனுப்பப்பட உள்ளது. அதன் பின், கின்னஸிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கும்.