மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற தேவையான பலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடம் உள்ளது.
ஹைலைட்ஸ்
- 1952-ல் ஒரே கூட்டத் தொடரில் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன
- அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- ஆகஸ்ட் 7-ம்தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறைவடைகிறது
New Delhi: நடப்பு கூட்டத் தொடரில் மட்டும் 30 மசோதாக்களை நிறைவேற்றி மோடி அரசு புதிய சாதனையை படைத்துள்ளது. அவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு போதிய பலம் உள்ளதே இந்த சாதனைக்கு முக்கிய காரணம் ஆகும்.
1952-ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றபோது அதில் 27 மசோதாக்களை நிறைவேற்றியதுதான் இதுநாள் வரையில் சாதனையாக இருந்தது. அந்த கூட்டத் தொடர் 64 நாட்கள் நடைபெற்றது.
நாடு முழுவதும் நடைபெற்ற 17-வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பாஜக கூட்டணிக்கு 352 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு 91 இடங்கள் கிடைத்தன. மக்களவையில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக இருந்தாலும், மாநிலங்களவையில் அதற்கு பெரும்பான்மை இல்லை.
மாநிலங்களவையை பொருத்தளவில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் மாநில சட்டசபைகளால் தேர்வு செய்யப்படுவார்கள். 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். இவற்றில் பாஜகவுக்கு மொத்தம் 99 உறுப்பினர்களே இருப்பதால் பெரும்பான்மை இல்லை.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 17-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரைக்கும் மக்களவையில் 30 மசோதாக்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் 1952-ல் ஏற்படுத்தப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 27-ல் முடிவதாக இருந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 7-வரைக்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 9-வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இருக்கும் என்பதால் மேலும் சில மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.