This Article is From Oct 14, 2019

TN Bypoll: 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றம்: திமுக புகார்!

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளரும், திமுக மாநிலங்களவை எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவுக்கும், தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

TN Bypoll: 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றம்: திமுக புகார்!

வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு வந்து வைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல். (File)

Chennai:

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. 

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. 

இந்நிலையில் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் நேற்றைய தினம் அளித்துள்ள புகாரில், நான்குனேரி இடைத்தேர்தலுக்காக நான்குனேரி வட்டார அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் எவ்வித முன்னறிவிப்பின்றி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரிடமோ எந்தவித தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இது தேர்தல் ஆணைய நடைமுறைகளுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் எதிரானது. 

இந்த திடீர் இடமாற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையான முறையில் இடைத் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இடமாற்றம் செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று அந்த புகார் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளரே மீண்டும் போட்டியிடுகிறார். 
 

.