30 பெண்களும் தங்களுக்கு பாதுகாப்பு தர போலீசாரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
Thiruvananthapuram: கேரளாவில் சுமார் 30 பெண்கள் வரும் ஞாயிறன்று சபரிமலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் காணப்படுவதால் போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வயது வித்தியாசம் இன்றி பெண்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சில பெண்கள் செல்வதற்கு முயற்சி மேற்கொண்டிருந்தனர். இதற்கு எதிராக பெரும் அளவில் மக்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
சபரிமலைக்கு வரும் பெண்கள் எவரையும் போராட்டக்காரர்கள் அனுமதிப்பதில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதால் அங்கு வரும் பெண்கள் சிலரை காவல் துறையினரே திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக வரும் ஞாயிறன்று 30 பெண்கள் அடங்கிய குழு ஒன்று சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கு போதிய பாதுகாப்பு தருமாறு போலீசாரிடம் அந்த பெண்கள் மனு அளித்துள்ளனர்.
'மனிதி' என்ற அந்த அமைப்பிற்கு தலைவராக செயல்பட்டு வருபவர் NDTV-க்கு அளித்த பேட்டியில், '' இப்போது வரைக்கும் சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று வருகின்றனர். அந்த முயற்சி ஏதும் வெற்றி பெறவில்லை. அவர்கள் தனியாக செல்வதால்தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. எனவே நாங்கள் குழுவாக செல்லவுள்ளோம். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் இருந்து எங்களுக்கு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.'' என்று கூறினார்.
30 பெண்கள் செல்வதற்கு பெரும் அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால் சபரி மலை விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த காத்திக்கிறது.