This Article is From Jan 02, 2020

மெரினாவில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: எச்.ராஜா உட்பட 311 பேர் மீது வழக்குப்பதிவு!

நெல்லை கண்ணனை கைதுசெய்யக்கோரி பாஜக தந்த தொடர் அழுத்தத்தை தொடர்ந்து, நேற்றிரவு பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். 

Advertisement
தமிழ்நாடு Edited by

மெரினாவில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 311 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 311 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேயில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணனின் உரை ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

அதில், நெல்லை கண்ணன் இரு சமூகங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டுவது போல் பேசியதாகவும், அமைதியை கெடுக்கும் நோக்குடன் அவமரியாதையாக பேசியதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதைத்தொடர்ந்து, நெல்லை கண்ணனை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக அவரை அழைத்துச் செல்ல போலீஸ் குழுவினர் செவ்வாய்க்கிழமையன்று நெல்லை கண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது, அவர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

இதனிடையே, பிரதமர் மோடி, அமித் ஷாவை அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணனை செய்து செய்ய வலியுறுத்தி நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

இந்தப் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களை கலைந்து போகச் சொல்லி சென்னை காவல்துறையினர் வலியுறுத்தியும் அவர்கள் செல்லாத காரணத்தால், சுமார் 150 பேரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை கண்ணனை கைதுசெய்யக்கோரி பாஜக தந்த தொடர் அழுத்தத்தை தொடர்ந்து, நேற்றிரவு பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

இந்நிலையில், மெரினாவில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 311 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement