This Article is From Mar 13, 2019

''ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு'' : ராகுல்

இன்று தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ராகுல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

''ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு'' : ராகுல்

தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஹைலைட்ஸ்

  • நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடு : ராகுல்
  • மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ராகுல் குற்றச்சாட்டு
  • ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு பணிகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று காலை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்ற ராகுல், அங்கு மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரசார தொடக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது-

தமிழகத்தில் இருப்பது பிரதமர் மோடியின் கைப்பாவை ஆட்சி. தமிழகத்தின் மொழி மற்றும் கலாசாரத்திற்கு எதிரான நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருகிறார். முன்பு திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது மாநிலத்தில் இருக்கும் அதிமுக அரசை பாஜக மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறது.

உண்மையின் பக்கம்தான் தமிழக மக்கள் எப்போதும் உள்ளனர். 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவேன் என்றும் பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவை எதையும் மோடி நிறைவேற்றவில்லை.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் மத்திய அரசு பணிகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

.