இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு 10.38 லட்சமாக உயர்வு!
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று
- மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 10.38 லட்சமாக உயர்வு
- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 26,273 ஆக உயர்வு
New Delhi: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 34,884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 10.38 லட்சமாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 26,273 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, குணமடைபவர்களின் விகிதமானது 62.93 சதவீதமாக உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 8,308 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பையில் மட்டும் 1,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் கவலையாக தானேவில் மட்டும் ஒட்டுமொத்தமாக 3,884 பேர் வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 631 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,894 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தலைநகர் கொல்கத்தாவில் மட்டும் 563 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நாட்டில் டெல்லி, சென்னை, அகமதாபாத், மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து கொல்கத்தாவிற்கு விமானங்கள் வருவதற்கு மேற்குவங்கத்தில் விதிக்கப்பட்ட தடை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில், ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.
கேரளாவின் கடலோரப் பகுதியான திருவனந்தபுரத்தில் சில இடங்களில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். எனினும், அரசு அதனை சமாளிக்கும் வகையில் உள்ளதாகவும், ஊரடங்கிற்கு எந்த தேவையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து நீடித்து வந்தால், ஆக.10ம் தேதிக்குள் இந்தியா 20 லட்சம் பாதிப்பு எண்ணிக்கையை அடைந்துவிடும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர பிரதேசத்தில் 2,062 பேர் பாதித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 40,000ஐ கடந்துள்ளது. இதில், 19,814 பேர் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,298 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 23ம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2 மாதத்திறகுப் பின்னர் மே.25ம் தேதியன்று உள்நாட்டு பயணிகள் விமானத்திற்கு மட்டும் அனுமதி வழங்கினர். இதனிடையே, விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, இன்று முதல் இருநாட்டு சர்வதேச விமான போக்குவரத்தும் இன்று முதல் தொடங்குகிறது. இதேபோல், ஜெர்மன் மற்றும் இங்கிலாந்துடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிதுள்ளது. அதேபோல், உலகளவில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 138,201 ஆக அமெரிக்காவில் அதிகம் உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 5.89 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1.38 கோடி பேர் வரை கொரோ வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.