தலைமுடி நிறைத்தது போன்று தோற்றமளிக்க வெள்ளை நிற ’டை’ அடித்துள்ளார்
Thiruvananthapuram: கேரளாவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் செவ்வாயன்று தான் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூல் குழு ஒன்றில், சபரிமலை சென்றதற்கு ஆதாரமாக மஞ்சுவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவில் மஞ்சு கூறியதாவது, நான் கடந்த ஜன.8ஆம் தேதி சபரிமலைக்குள் சென்றேன். திரிசூரில் இருந்து பேருந்து மூலம் சென்ற நான், என்னை இளம் பெண்ணாக மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. இப்படி கோவிலுக்குள் சென்ற நான், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்தேன் என்கிறார்.
தகவலின் படி, சபரிமலைக்குள் செல்வதற்கு மஞ்சு எந்த போலீசாரின் உதவியையும் பெறவில்லை. இவர் ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது, பம்பை அருகே அவர் சென்றபோது
கனமழை காரணமாக போலீசார் அவரை திரும்பி அனுப்பியதாக தெரிகிறது.
இளம்பெண் கோவிலுக்குள் செல்வதால் ஏற்படும் போராட்டங்களை தடுக்கவும், தன் மீதான தாக்குதலை தவிர்க்கவும் மஞ்சு தன்னை வயதானவராக காட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தலைமுடி நிறைத்தது போன்று தோற்றமளிக்க வெள்ளை நிற 'டை' அடித்துள்ளார் என்பது முகநூல் குழுவில் பதிவிடப்பட்டுள்ள மஞ்சுவின் புகைப்படங்களின் மூலம் தெரிகிறது.
கேரள மாநில அரசானது, இதுவரை 10-50 வயிதிலான பெண்கள் எத்தனை பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனினும், ஊடகங்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், இந்த வருடத்தில் மட்டும் 10 பெண்கள் சபரிமலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக கேள்வி எழுப்பியபோது, இதுவரை எத்தனை பெண்கள் சென்றுள்ளனர் என்ற விவரம் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.