CBI chief: வெர்மா வீட்டில் பாதுகாப்புக்காக இருந்தவர்கள், 4 பேரையும் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
New Delhi: கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவின் வீட்டுக்கு வெளியே வேவு பார்த்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருக்கும் வெர்மாவின் வீட்டுக்கு வெளியே 4 மர்ம நபர்கள் இன்று காலை வேவு பார்த்துள்ளனர். வெர்மா வீட்டில் பாதுகாப்புக்காக இருந்தவர்கள், 4 பேரையும் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
4 பேரையும் காவல் துறை தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேவு பார்த்த 4 பேரும், ஐபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், வெர்மாவின் நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ளவே அவர்கள் அப்படி செய்தனர் என்றும் கூறப்படுகிறது.
நேற்று சிபிஐ இயக்குநர் வெர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மற்றும் பல சிபிஐ அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்னர் அலோக் வெர்மா, அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ஆனால் வெர்மாவின் நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அஸ்தானா, அவர் தான் 2 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுள்ளார் என்று அரசுக்கு எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தான் சிபிஐ-க்குள் பனிப் போர் மூண்டது. இதையடுத்து தான் அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரதமர் அலுவலகம்.