This Article is From Sep 21, 2018

ஜம்மூ - காஷ்மீரில் 3 காவலர்களை கடத்தி, கொலை செய்த தீவிரவாதிகள்!

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம், ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன

கடத்தப்பட்டவர்களில் 3 எஸ்.பி.ஓ அதிகாரிகளும் அடக்கம்

Shopian, Jammu:

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியனிலிருந்து 3 காவலர்களை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தி, கொலை செய்துள்ளனர். முன்னதாக தீவிரவாதிகள், காவலர்களை பணியிலிருந்து விலகுமாறு எச்சரித்தனர் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

கப்ரான் கிராமத்தில் இருக்கும் காவலர்கள் வீட்டுக்குச் சென்ற தீவிரவாதிகள், அவர்களை கடத்தினர் என்று போலீஸ் வட்டாரம் தகவல் கூறுகிறது. கடத்தப்பட்ட காவலர்கள் ஃபிர்தவுஸ் அஹ்மத் குச்சே, குல்தீப் சிங், நிசார் அஹ்மத் தோபி மற்றும் ஃபயாஸ் அஹ்மத் பட் என்று தெரிய வந்துள்ளது. இதில் ஒரு காவலர், 'உள்ளூர் மக்களின்' உதவியோடு மீட்கப்பட்டுள்ளார். 

கொல்லப்பட்டக் காவலர்களின் உடல்கள் ஷோபியனுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

காவலர்கள் கொல்லப்பட்டது குறித்து பிடிபி கட்சியின் தலைவர் மெஹுபூபா முப்டி, 'போலீஸாரை கடத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை எடுபடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பேச்சுவார்த்தையின் மூலமே காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார்.

3 வாரத்துக்கு முன்னர் 3 காவலர்களையும், காவலர்களின் 8 உறவினர்களையும் கடத்தினர் தீவிரவாதிகள். அப்போது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர். தீவிரவாதிகள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் ரிலீஸ் செய்த பின்னர், கட்டத்தியவர்களை விடுதலை செய்தனர் தீவிரவாதிகள். 

கடந்த செவ்வாய் கிழமை ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பிடமிருந்து ஒரு மிரட்டல் வீடியோ வந்தது. அதில், ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் காவலர்கள் பணியிலிருந்து விலகி விடுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காவலர்கள் கடத்தப்பட்டுள்ளனர். முஜாஹிதீன் அமைப்பு, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரரை கொன்ற பிறகு இந்த மிரட்டல் வீடியோவை வெளியிட்டுள்ளது. 

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம், ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. மாநிலத்தின் முக்கிய கட்சிகளான பிடிபி மற்றும் தேசிய கான்ஃப்ரன்ஸ் ஆகியவை, சட்ட சாசனத்தின் பிரிவு 35ஏ-வை நீக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. அதேபோல காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்புகள், இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளன. 

பிரிவு 35ஏ, ஜம்மூ - காஷ்மீர் மக்களுக்கு பல சிறப்பு சலுகைகளை அளித்து வருகின்றன. 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களுக்கும் அதிக அச்சுறுத்தல் இருப்பதாக தெரிகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமான கலவரங்கள் நடக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

.