This Article is From Jul 02, 2020

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து: 6 பேர் பலி, 16 பேர் காயம்!

பாய்லர் வெடித்ததால் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து எனத் தகவல்

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து: 6 பேர் பலி, 16 பேர் காயம்!

ஹைலைட்ஸ்

  • பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது
  • இரண்டு மாதங்களில் நடக்கும் 2வது விபத்து இது
  • நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. 

விபத்து குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், “விபத்து ஏற்பட்ட பாய்லர் செயல்பாட்டில் இருக்கவில்லை. அது எப்படி வெடித்தது என்பது குறித்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். உயிரிழந்த 6 பேர் நிரந்தர ஊழியர்கள் என்றும், படுகாயமடைந்த 10 பேர் ஒப்பந்த ஊழியர்கள். ,” எனத் தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஏற்படும் விபத்து இது. 

கடந்த மே மாதம் என்எல்சி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாய்லர் விபத்தில், 8 ஊழியர்களுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இதில் அடங்குவர். 

என்எல்சி அனல் மின் நிலையம், சுமார் 3,940 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இன்று விபத்து நடந்த மின் நிலையம், சுமார் 1,470 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. 

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 27,000 ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இதில் 15,000 பேர் ஒப்பந்த ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து வருத்தமடைந்தேன். 

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளேன். வேண்டிய உதவிகளை செய்வதாக உறுதியளித்திருக்கிறேன். காயமடைந்தவர்கள் சீக்கிரமே குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

.