This Article is From Dec 24, 2018

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் 4 பேர் அதிமுகவில் சேர தூதுவிட்டனர்: ஓபிஎஸ்

அதிமுகவில் இணைவதற்காக கடந்த 20ஆம் தேதி டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் 4 பேர் தன்னிடம் தூது விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் 4 பேர் அதிமுகவில் சேர தூதுவிட்டனர்: ஓபிஎஸ்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,

ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கத்தமிழ்ச்செல்வன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ரூ.1088 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற இடைத்தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும். இதற்காக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோரை தொகுதி பொறுப்பாளர்களாக நியமித்துள்ளோம்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கடந்த 20ஆம் தேதி, நான் உங்களை சந்திக்க வேண்டும் என என்னிடம் தூதுவிட்டனர். டிடிவி தினகரனிடம் இருந்து ராஜினாமா செய்துவிட்டு இங்கு வாருங்கள் என்றேன். ஏனெனில் அவர்களுக்கு பேரம் பேசியே பழகிவிட்டது. சேருவதற்கு முன்பே பேரத்துடன் தான் வருகிறார்கள்.

தற்போது திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜியும் முதலில் அதிமுகவில் இணைவதற்கு முதல்வரிடம் தூதுவிட்டார். அப்போது, முதல்வர் நீ செய்தது ராஜ துரோகம் என கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜியை அரவக்குறிச்சியில் ஜெயிக்க வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கேயே இருந்து எவ்வளவு கடினப்பட்டு உழைத்தார் என்பதை அவர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். செந்தில் பாலாஜி ராஜ துரோகி அவரை சேர்த்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். முதல்வர் அப்படி கூறியதும் அவர் திமுகவில் போய் சேர்ந்துவிட்டார் என்று அவர் கூறினார்.


 

.