நவ்தீப் பைன்ஸ் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
Ottawa: கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேருக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடம் அளித்துள்ளார். மொத்தம் 37 அமைச்சர்கள் கனடாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள்.
அவர்களில் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக இருந்த அனிதா ஆனந்த் உள்பட 7 பேர் புதுமுகங்கள்.
338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனிதா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கனடா அமைச்சரவையில் இந்த துறை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழங்கும். ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை இந்த துறைதான் வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிதாவை தவிர்த்து சீக்கியர்களான நவ்தீப் பைன்ஸ், பர்திஷ் சக்கார், ஹர்ஜித் சாஜன் ஆகிய 3 பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். நேற்று ஒட்டாவா நகரில் நடைபெற்ற விழாவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
சாஜனுக்கு ஏற்கனவே அவர் வகித்த பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் கனடா ராணுவத்தில் துணை தளபதியாக இருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
நவ்தீப் பைன்ஸ் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கனடாவில் 338 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 157 இடங்களும், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்களும் கிடைத்தன.
ப்ளாக் க்யூப்காஸ் 32 இடங்களையும், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சீக்கியர் ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சிக்கு 24 இடங்களும், பசுமை கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன. சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.
ஆட்சியமைக்க 170 உறுப்பினர்கள் பலம் தேவை என்ற நிலையில், லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பெற இன்னும் 13 பேரின் ஆதரவை தேவையாக இருக்கிறது. கனடாவின் அரசியலமைப்பு சட்டப்படி, எதிர்க்கட்சிகளின் ஆதரவை பிரதமர் ட்ரூடோ பெறுவது என்பது தற்போது கட்டாயமாக உள்ளது.