போயிங் 737 ரக விமானம் நேற்று விபத்துக்குள்ளானது
Addis Ababa, Ethiopia: எத்தியோப்பியா விமான விபத்தில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் தலைநகர் நைரோபியை நோக்கி நேற்று காலை போயிங் 737 ரக விமானம் கிளம்பியது.
அதில் பயணிகள் 149 பேர் மற்றும் விமான பணியாளர்கள் 8 பேர் என மொத்தம் 157 பேர் இருந்தனர். இந்த நிலையில் புறப்பட்டுச் சென்ற 6 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.
இதனால், விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் அலெர்ட் செய்யப்பட்டனர். இதில், அடிஸ் அபாபாவில் இருந்து தென்கிழக்கில் 60 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் நொறுங்கிக் கிடந்தது. பின்னர் இந்த விமானம் 157 பேருடன் சென்ற விமானம் என்பது உறுதி செய்யப்பட்டது.
துரதிருஷ்டவசமாக விமானத்தில் இருந்தவர்களில் எவரும் உயிர் பிழைக்கவில்லை. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கென்யாவை சேர்ந்த 32 பேர் விமான விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். கனடாவை சேர்ந்த 18 பேரும், எத்தியோப்பியாவை சேர்ந்த 9 பேரும் பலியாகி உள்ளனர்.