8 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
New Delhi: டெல்லியில் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட டிக் டாக் ஒன்று, துப்பாக்கிச் சூடு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நேற்றிரவு சரியாக 10.02-க்கு அகர் நகரின் சோம் விஹார் பகுதியில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று காயம் அடைந்த அகர் நகரைச் சேர்ந்த ரவி சர்மா (25), ராஜேந்தர் (46), பிரிஜ் விகாரை சேர்ந்த ஹிமான்சு பால் (23), ஷிஷ் மகாலை சேர்ந்த சஞ்சீவ் குமார் (21) ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு 10.02-க்கு நடந்த நிலையில் போலீசாருக்கு 10.15-க்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக அவர்கள் சென்று காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர்.
முதல்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய 2 குழுவினர் கடந்த மாதம் 29-ம்தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு ஒருதரப்பை சேர்ந்தவர் டிக் டாக் எடுத்துள்ளார். இதற்கு மற்றொரு தரப்பை சேர்ந்தவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதை மீறி டிக்டாக் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கு மறுநாள், டிக் டாக் எடுக்க வேண்டாம் சொன்னவர், டிக் டாக் எடுத்தவரை நேரில் சென்று தாக்கியுள்ளார்.
இதன்பின்னர் சில நாட்கள் கழித்து, பழிக்குப் பழி வாங்குதற்காக தாக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும், தாக்கியவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தாயார் மட்டுமே இருந்திருக்கிறார். அப்போது, டிக் டாக் எடுத்த தரப்பை சேர்ந்தவர்கள் தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது மகன், தனது தாயை திட்டிய அனைவரையும் கொல்லப்போவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், 3 மோட்டார் சைக்கிளில் வந்த டிக் டாக் எதிர்ப்பு தரப்பினர் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிக் டாக் எடுத்த தரப்பினரை சரமாரியாக சுட்டனர்.
8 முறை சுடப்பட்டதில் 4 பேர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 34 (பொது நோக்கத்துக்காக கும்பலாக சேர்ந்து குற்றம் செய்தல்), ஆயுத சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடி குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் சூதாட்ட விடுதியில் நடந்தள்ளது. கடந்த மாதம் 22-ம்தேதி இந்த சூதாட்ட விடுதியை நடத்திய சிவம் என்பவரை போலீசார் கைது செய்து, சூதாட்டம் நடத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.