ஹைலைட்ஸ்
- சென்ற ஆண்டு கடத்தல் வழக்கில் கைதானார் திலீப்
- இவரை மீண்டும் அமைப்பில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது AMMA
- இதனைக் கண்டித்து நான்கு நடிகைகள் AMMAவிலிருந்து விலகியிருக்கினர்
Thiruvananthapuram: மலையாளத் திரையுலகில் நடிகைகளின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது WCC (Women in Cinema Collective). நடிகை மஞ்சு வாரியார் இதற்கு தலைமை வகிக்கிறார். கடந்த புதன்கிழமை WCCயின் உறுப்பினரான நான்கு நடிகைகள், AMMA (Association of Malayalam Movie Artistes) அமைப்பிலிருந்து விலகியிருக்கிறார்கள். நடிகர் திலீப்பை மீண்டும் AMMA அமைப்புக்குள் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடிகையைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்தார் திலீப். இவரை மீண்டும் AMMA அமைப்புக்குள் சேர்ப்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும் நடிகைகள் ரீமா கலிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் மற்றும் கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை உட்பட நால்வரும் AMMAவிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை இது பற்றி கூறும் போது, "அந்த நடிகரால் எனது பல நடிப்பு வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டது. அது குறித்து புகார் செய்த போது, AMMA அமைப்பு அது பற்றி கண்டுகொள்ளவே இல்லை. அந்த பயங்கர சம்பவம் நடந்த பிறகும் கூட எனக்கு எந்த நீதியும் கிடைக்காமல், குற்றம் சாட்டப்பட்ட அந்த நடிகரைப் பாதுகாப்பதிலேயே குறியாய் இருந்தது. இதற்கு மேல் அந்த அமைப்பில் இருப்பதில் எந்த உபயோகமும் இல்லை அதனால், நான் விலகுகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
"நான் AMMAவிலிருந்து விலகுகிறேன். இது மிக முன்னதாகவே நான் செய்திருக்க வேண்டிய ஒன்று. கமிட்டி மெம்பராக இருந்த போதும் அதன் முடிவை எதிர்த்து என்னால் குரல் எழுப்ப முடியவில்லை என்பது மிகவும் அதிருப்தியை தருகிறது. எந்த எதிர்ப்பு கேள்வியும் இல்லாமல், அவர்களின் எல்லா முடிவுகளையும் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். இனிமேலும் என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. என் நண்பர்களுடன் இணைந்து AMMAவின் அர்த்தமற்ற முடிவுகளுக்கு எதிராகப் போராடுவேன்" எனத் தெரிவித்திருக்கிறார் நடிகை மற்றும் இயக்குநர் கீது மோகன்தாஸ்.
ரம்யா நம்பீசன் இது பற்றிக் கூறும் போது "AMMAவின் தற்போதைய சூழலும், அதன் மனிதாபிமானமற்ற முடிவுகளும் எனக்குப் பிடிக்கவில்லை. என் உடன் வேலை செய்யும் சக நடிகைகளுக்கு எதிராக செயல்படும் இந்த அமைப்பிலிருந்து விலகுவதுதான் நல்லது" எனத் தெரிவித்திருக்கிறார்.
"இனி இந்த துறைக்கு வரும் தலைமுறைகளாவது தங்கள் எதிர்காலத்தை எந்த சமரசமும் இன்றி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட நான் AMMAவிலிருந்து விலகுகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார் நடிகை ரீமா கலீங்கல்.
கைது செய்யப்பட போது அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார் திலீப். சமீபத்தில் AMMAவின் புதிய தலைவராக மோகன் லால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழலில் திலீப்பை மீண்டும் சேர்க்கும் முடிவால் சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது. WCC அமைப்பை சேர்ந்த ப்ரித்விராஜ் போன்ற நடிகர்கள் திலீப்பை நீக்கக் கோரி குரல் கொடுத்து வருகின்றனர். இதே வேளையில், சர்ச்சைகளுக்கு நடுவே அமைதி காக்கும் திலீபுக்கும் சில திரைத்துறையினர் ஆதரவாகவே பேசி வருகின்றனர். இதன் முடிவு என்னவாகும் எனப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.