சென்னை புறநகரிலிருந்து கடற்கரை மார்க்கமாக வந்த மின்சார ரயலில் இருந்து கீழே விழுந்து 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான பரங்கிமலைக்கு அருகே தான் இந்த விபத்து நடந்துள்ளது.
இன்று மாம்பலம் - கோடம்பாக்கம் வழித் தடத்தில் உயிர் மின் அழுத்தக் கம்பி விழுந்ததால், ரயில் போக்குவரத்தில் தாமதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீண்ட நேரம் கழித்து வந்த ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பலர் ரயில் பெட்டிகளுக்கு வெளியே தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இதையடுத்து தான், அருகில் இருக்கும் தடுப்பு சுவர் மீது மோதியும் கீழேயும் பலர் விழுந்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல் கூறப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அதிரச்சியளிக்கும் சம்பவத்தை அடுத்து பரங்கிமலைக்கு வந்த ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசும்போது, ‘உயிரிழப்புக்கு தடுப்பு சுவரும், ரயில்கள் எண்ணிக்கை குறைவாக இயக்கப்பட்டதும் காரணமாக இருந்தாக பயணிகள் புகார் கூறியுள்ளனர். உடனடியாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க வேண்டாம் எனக் கூறியுள்ளோம். முடிந்தவரை படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.