This Article is From Jun 17, 2020

இந்தியா - சீனா லடாக் மோதல்: 20 பேர் பலி; 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடம் என அதிர்ச்சித் தகவல்!

கடைசியாக 1962 ஆம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் போர் புரிந்தன.

1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு தரப்பு மோதலினால் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஹைலைட்ஸ்

  • திங்கட் கிழமை இரவு மோதல் சம்பவம் நடந்துள்ளது
  • இந்தியத் தரப்பில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்
  • சீனத் தரப்பிலும் உயிரிழப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது
New Delhi:

இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ராணுவ உள்வட்டாரத் தகவல் வந்துள்ளது. அதேபோல சீன ராணுவத் தரப்பிலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 

‘இந்திய மற்றும் சீனத் துருப்புகள், கல்வான் பகுதியில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மோதலில் ஈடுபட்டன. இந்த உரசல் போக்கினால், பதற்றமான சூழலில் பணியில் இருந்த 17 இந்திய ராணுவ வீரர்கள், மிகவும் உயரமான பகுதியில் குறைவான வெப்பநிலை கொண்ட இடத்தில் காயமுற்றனர். அவர்கள் மரணமடைந்துள்ளார்கள். இதன் மூலம் இந்த மோதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்திய ராணுவம், நாட்டின் இறையாண்மையையும் நில உரிமையையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது,' என்று இந்த அதிர்ச்சிகர மோதல் சம்பவம் பற்றி கூறியுள்ளது இந்திய ராணுவம். 

இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஆயுதங்கள் இல்லாத சண்டை இரு தரப்புக்கும் இடையே நடந்துள்ளது. குறிப்பாக கைகளை வைத்தும் கற்களை வைத்தும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் சண்டை போட்டுள்ளனர்எனப்படுகிறது. சீன ராணுவத் தரப்பு, இறும்புக் கம்பிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. திங்கட்கிழமை பின்னிரவு நேரத்தில் மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 

சீன அரசும், தங்கள் தரப்பிலும் இந்த சம்பவத்தினால் உயிர்ச் சேதம் ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக சீனா கூறவில்லை. 

இது குறித்து வெளியவுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, “சீனத் தரப்பு தான்தோன்றித் தனமாக எல்லையில் உள்ள கட்டுப்பாட்டையும் நடைமுறையையும் மீறி செயல்பட்டதே, 15 ஜூன், 2020 அன்று இரு தரப்பு மோதலுக்குக் காரணம். இதன் விளைவாக இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புகளும் பேசி போட்டுக் கொண்ட உடன்படிக்கையை சீன ராணுவம் பின்பற்றியிருந்தால் இந்த மோதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என்றார். 

இந்திய - சீன எல்லையில் உள்ள கிழக்கு லடாக் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், தூதர ரீதியிலும் ராணுவ ரீதியிலும் அதைத் தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்துதான் கடந்த ஜூன் 6 ஆம் தேதி, இரு தரப்பும் அமைதியாக கலைந்து செல்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. உயர்மட்ட ரீதியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து, பாதுகாப்பின் முன்னணியில் இருக்கும் ராணுவத் தரப்புகள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்துள்ளன. 

வெளியுறவுத் துறை, “இரு தரப்புகளும் அமைதியான முறையில் பின்வாங்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சீனத் தரப்பு, எல்லைக் கட்டுப்பாட்டை மீறி கல்வான் பகுதியில் நடந்து கொண்டது. இந்திய ராணுவத் தரப்பு, தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் இந்திய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே செய்து வருகின்றது. அதையேதான் சீனத் தரப்பிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதற்கு தற்போதுள்ள முரண்பாடுகளை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் இந்தியாவின் இறையாண்மையையும் நிலப்பகுதியையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று கூறியுள்ளது. 

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியான், “சீனத் தரப்பை தாக்கியதனால், இந்திய - சீன எல்லையில் மிக வன்முறையான சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சீனத் தரப்பு தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது. 

இந்த பதற்றமான சூழலில் இந்தியா பொறுப்புடன் நடந்து கொண்டு, தன் எல்லையில் உள்ள முன்னிலை துருப்புகளை கட்டுக்குள் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எல்லையைத் தாண்ட வேண்டாம் என்றும், பிரச்னையை வரவழைக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றும், தான்தோன்றித் தனமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால் இரு நாட்டு எல்லைப் பிரச்னை பெரிதாகிவிடும்” என்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். 

சமீப காலமாக கல்வான் பகுதியில் இந்தியத் தரப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பாக போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சாலை கட்டுமானத்தை முடித்துள்ளது. இதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்தபோதும் இந்தியா, தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் செயல்படுகிறோம் என்று உறுதியளிதத்து. இந்த விஷயம் பின் நாட்களில் பெரிய பிரச்னையாக வெடித்திருக்கலாம் என்று ராணுவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

கடைசியாக 1962 ஆம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் போர் புரிந்தன. 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு தரப்பு மோதலினால் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


 

.