3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர், மேலும், 6 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
Noida: நொய்டாவின் யமுனா நெடுஞ்சாலையில், அதிவேகமாக சென்ற எஸ்யூவி ரக கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து 30அடி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒரு பெண் உட்பட 4 ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நொய்டாவின் பார்க் காவல் நிலையத்திற்குட்பட்ட ஜிரோ பாய்ண்ட் என்ற இடத்தில் நேற்று காலை 10 மணி அளவில், இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய அந்த புதிய எஸ்யூவி ரக காரில் 9 பேர் பயணம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி வட்ட அலுவலர் தானு உபாதே கூறும்போது, நொய்டாவின் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற அந்த 'ஃபோர்டு எண்டேவர்' கார், பாரி சொவுக் என்ற இடத்திற்கு அருகே யூ-டர்ன் எடுக்க திரும்பியுள்ளது. அப்போது, லேசான மழை பெய்திருந்ததால், சாலையில் கார் வழுக்கி சென்றது, இதில், கட்டுபாட்டை இழந்த கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிவேகமாக சென்றபோது, காரை அதே வேகத்தில் திருப்ப முயன்றதே விபத்துக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதில், மருத்துவமனையில் வைத்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேரில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, விபத்தின் போது காரில் 3 பெண்கள் உட்பட 9 பேர் பயணம் செய்துள்ளனர். அனைவரும் 25 முதல் 35 வயதுக்குள்ளானவர்கள் ஆவார்கள்.
இதுகுறித்து விபத்தில் சிக்கிய ஒருவர் கூறும்போது, நொய்டாவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் அனைவரும் பணிபுரிந்து வருவதாகவும், அலுவலத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் புதிய கார் வாங்கினார். அதை கொண்டாட அந்த காரில் நாங்கள் ஒரு குழுவாக புறப்பட்டு சென்றோம். அதிகாலையில் அலிகார் சென்ற நாங்கள் திரும்பி வரும்போது, இந்த விபத்து நிகழ்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.