Coronavirus: கொரோனா பாதிப்புக்கு 414 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக உயர்வு
- கடந்த 24மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு 37 பேர் உயிரிழப்பு
- மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு
New Delhi: இந்தியாவில், கடந்த 24மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினம், சென்னை உட்பட 6 மெட்ரோ நகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், சுமார் 700 மாவட்டங்களில் 170 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவித்தது. அவற்றில் 123 மாவட்டங்கள் மிக மிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் உள்ள அனைத்து 9 மாவட்டங்களும் வருகின்றன.
மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபத், சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய மெட்ரோ நகரங்களில் உள்ள சில மாவட்டங்களும் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை சிவப்பு மண்டலங்கள் என்றும் அதிகாரிகள் அழைக்கின்றனர். இவற்றில்தான் 80 சதவீத கொரோனா பாதிப்புகள் இருக்கின்றன.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களில் கொரோனா தொற்று அதிகம் காணப்படுகிறது. மும்பையில் மட்டும் 1,896 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில் 1,561 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
சிவப்பு மண்டலம் அல்லது ஹாட்ஸ்பாட்டிற்கு அடுத்த ஆபத்தான மண்டலம் என்ற பகுதியில் 207 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அனைத்து சிவப்பு மண்டல பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த பகுதிகளில் 28 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாவிட்டால் அவை பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். தொடர்ந்து, ஏப்ரல்.20ம் தேதிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான அறவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் ஏப்.20ம் தேதிக்கு பிறகு வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், இ-வணிகம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. 2ம் கட்ட ஊரடங்கு நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில், இந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அனைத்து பாதுகாப்பு மற்றும் சமூக விலகல் நெறிமுறைகளை கடைப்படிப்பதை உறுதி செய்வது மாநிலங்களின் பொறுப்பாகும், என உள்துறை அமைச்சக வழிகாட்டுதல் நெறிமுறை தெரிவித்துள்ளது. இந்த விதிவிலக்குகள் ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியதால், பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏப்.20ம் தேதி முதல் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குரவத்துக்கு தடை தொடரும் என்றும், எனினும் அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், நெடுஞ்சாலை உணவகங்கள், கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், அரசு பணிகளை மேற்கொள்ளும் கால்சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விமானம், ரயில், சாலை போக்குவரத்துகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்படும். அனைத்து கல்வி நிலையங்கள், பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்க தடை நீடிக்கிறது. இதேபோல், வணிக வளாகங்கள், திரையரங்குகளை திறக்க தடை நீடிக்கிறது. மத கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், உள்ளிட்ட எந்தவொரு பொதுக்கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.