டெல்லி மசூதி சம்பவம் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- டெல்லி தப்லீக் மசூதியில் இருந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி.
- 400-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பொறுப்பற்ற முறையில் தப்லீக் ஜமாத் நடந்துகொண்டதாக கெஜ்ரிவால் புகார்
New Delhi: டெல்லி மசூதியில் மத நிகழ்ச்சிகளுக்காக ஒன்று கூடியவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் அமைப்பான தப்லீக் ஜமாத்தின் இந்திய தலைமை அலுவலகம் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு மத நிகழ்ச்சி கடந்த 8-ம்தேதி முதல் 10-ம்தேதி வரையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற சுமார் 2 ஆயிரம்பேர், தலைமை அலுவலகத்திலேயே தங்கியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் 2 ஆயிரம்பேர் தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தங்கியிருந்தவர்களில் 400-க்கும் அதிகமானோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டு நகரின் வெவ்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது-
இந்த சம்பவம் மிகவும் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. உலகமே மக்கள் உயிரிழந்து வருவதை கவனத்தில் கொண்டு, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மக்கள் வரக்கூடாதென உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நிஜாமுதீன் மர்கஸ் நிர்வாகிகள் மிகக் கடுமையான குற்றத்தை செய்துள்ளனர்.
இவ்வாறு முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். 2 ஆயிரம் பேர் கூடியிருந்தது தொடர்பாக மசூதி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மசூதியில் இருந்து வெளியே சென்றவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளன.