தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் சென்னையில் நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என 45,000 பேர் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில், குழு ஒன்றை அமைத்தது ஆறு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, சென்னை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேற்று அந்த குழுவின் விசாரணை நடைபெற்றது. அதில், வேதாந்தா நிறுவன தரப்பினர், மாசு கட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீர் ஆணைய அதிகாரிகள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விசாரணையில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அப்போது, வேதாந்தா குழு தரப்பு, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிக்க தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ரத்து செய்து உத்தரவிட்டது சட்டத்திற்கு புறம்பானது என குற்றம்சாட்டியது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 5 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என 45,000 பேர் கையெழுத்திட்டு ஆதரவு மனுக்களை அளித்துள்னர். தூத்துக்குடியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மனு கொடுக்க வந்தவர்களை, குண்டர்கள் விரட்டினர் என ஆலை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மிதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையானது சுற்றுசுழலுக்கு பெரும் பேரழிவை எற்படுத்துகிறது என்றார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும், ஆலைக்கு எதிர்ப்பு உள்ளது என்றும் அக்.5ம் தேதி எங்கள் கருத்துகளை கூறுவோம் என்றார்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை, வரும் அக்டோபர் 5ஆம் தேதிக்கு, குழுவினர் ஒத்திவைத்தனர். இரு தரப்பினரிடம் நடத்தும் முழுமையான விசாரணைக்கு பிறகு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், இந்த குழுவினர் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)