Himachal Pradesh: இமாச்சல பிரதேசத்தின் லாஹுல் மற்றும் ஸ்பிடியில் பனி பொழிந்து வருகிறது
ஹைலைட்ஸ்
- ஹம்பதா பாஸில் இருந்து மணலிக்கு வர 45 பேர் குழு முடிவு செய்திருந்தது
- இம்மாசல பிரதேசத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது
- கங்கரா, குல்லு, ஹமிர்பூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
New Delhi: இமாச்சல பிரதேசத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 45 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதில் 35 பேர் ரூர்க்கியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் லாஹுல் மற்றும் ஸ்பிடி மாநிலங்களில் 45 பேர் கொண்ட குழு மலையேற்றம் மேற்கொண்டிருந்தது என ஏஎன்ஐ செய்தி ஊடகம் கூறியுள்ளது.
மலையேற்றம் ஈடுபட்டிருந்த ஒரு மாணவரின் தந்தை ராஜ்வீர் சிங், ‘ஹம்பதா பாஸுக்கு 45 பேர் கொண்ட குழு மலையேற்றம் செய்யச் சென்றது. அவர்கள் மணலிக்கு இந்நேரம் வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
மழை காரணமாக கங்கரா, குல்லு, ஹமிர்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
குல்லு மாவட்ட நிர்வாகம், ‘ஹை அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்மாவட்டத்தின் அரசு அதிகாரிகளும் உஷார் நிலையில் உள்ளனர். குல்லுவில் வெள்ளம் காரணமாக, இதுவரை 20 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து குல்லு மலைப் பிரதேசத்தில் அனைத்து வித சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் தற்காலிதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹமிர்பூர், குல்லு மற்றும் கங்கரா மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மூட உத்தரவிட்டப்பட்டுள்ளது.