தமிழகத்தில் புதிதாக இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 82 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
தமிழகத்தில் புதிதாக இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்று மட்டும் 82 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் கரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.1 சதவீதமாகத் தொடர்கிறது.
ஏற்கனவே செயல்பட்டுவருவதை தவிர்த்து மேலும் 3 ஆய்வகங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் 31 ஆக அதிகரித்துள்ளன.
இன்றைக்குப் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் 28 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.
கொரோனாவுக்கு எதிராக பன்முக நடவடிக்கைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் ஆய்வகங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில்தான் ரேபிட் டெஸ்ட்டுகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக 235 பேருடன் சென்னை, 128 பேருடன் கோவை, 108 பேருடன் திருப்பூர், 70 பேருடன் ஈரோடு, 69 பேருடன் திண்டுக்கல் மாவட்டங்கள் உள்ளன.