This Article is From Jun 09, 2020

ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் கொரோனா கேஸஸ்; அதிர்ச்சி கிளப்பும் ஆம் ஆத்மி அரசு!

"டெல்லியில் உள்ள 50 சதவீத மருத்துவமனை படுக்கைகள், வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது"

“டெல்லி நகரில், கொரோனா வைரஸின் சமூகப் பரவல் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று மத்திய அரசு தரப்பு சொல்கிறது"

ஹைலைட்ஸ்

  • 'டெல்லியில் நோய் இரட்டிப்பு விகிதம் காலம் 12 -13 நாட்களாக உள்ளன'
  • 'ஜூலை இறுதிக்குள் 80,000 படுக்கைகள் தேவைப்படும்'
  • இன்று மணிஷ் சிசோடியா, துணை ஆளுநரை நேரில் சந்தித்தார்
New Delhi:

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் 5.5 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியின் தற்போதைய நோய் இரட்டிப்பு விகிதத்தை வைத்து இந்தக் கணிப்பை சிசோடியா கூறுகிறார். டெல்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் டெல்லிவாசிகளுக்கே ஒதுக்கப்படும் என்று அம்மாநில அரசின் அதிரடி அறிவிப்பை, துணை நிலை ஆளுநர் ரத்து செய்துள்ள நிலையில் இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார். 

இன்று துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் மற்றும் மத்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிசோடியா, “டெல்லியின் நோய் தொற்று இரட்டிப்பு விகிதம் 12 - 13 நாட்களாக உள்ளன. இதனால் ஜூலை மாத இறுதிக்குள் 5.5 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது நமக்கு 80,000 மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படும். 

இந்த கணக்கீடுகளை கவனத்தில் கொண்டு டெல்லி அரசின் மருத்துவமனை படுக்கைகள் குறித்தான உத்தரவை ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள் அனைவருக்கும் பயன்படுத்தப்படும். ஆனால் ஆளுநர், தன் முடிவில் மாற்றம் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள 50 சதவீத மருத்துவமனை படுக்கைகள், வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லியில் வைரஸ் பாதிப்புகள் அதிகமாகும் என்று நமக்குத் தெரிய வந்துள்ளது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று விரிவாக பேசி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் அவர், “டெல்லி நகரில், கொரோனா வைரஸின் சமூகப் பரவல் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று மத்திய அரசு தரப்பு சொல்கிறது. அதே நேரத்தில் நகரில் ஏற்படும் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகள் எப்படி உருவானது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை,” என்றார். இதற்கு செய்தியாளர்கள், “அப்படியென்றால் டெல்லியில் சமூகப் பரவல் இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாமா?” என்றனர். அதற்கு சிசோடியா, “மத்திய அரசு சொல்லாமல் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது,” என்று முடித்துவிட்டார். 

.