This Article is From Jan 21, 2020

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டுமா? செங்கோட்டையன் விளக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டுமா? செங்கோட்டையன் விளக்கம்

பிற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - செங்கோட்டையன்

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். 

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முறையால், உளவியல் ரீதியான பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

அதையொட்டி, முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது. 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியல், தற்போது மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன. 

மேலும், எந்தெந்த மையங்களில் எந்தெந்த பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வு மைய பொறுப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரின் விபரங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை, தங்களுடைய சொந்த பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்காமல், வேறொரு பள்ளியில் தேர்வு எழுத வைப்பது பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல்கள் உருவாகும் என கல்வியாளர்கள் கடும் அச்சம் தெரிவித்தனர். 

இந்நிலையில், 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை என்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும். 

5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும். இந்த பொதுத் தேர்வில் சுலபமான கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். மாணவர்களின் திறனைக் கண்டறியவே பிற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழகத்திலும் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தை பெற்றுக்கொண்டு வார விடுமுறையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இனி மார்ச் மாதம் தான் நீட் பயிற்சி வகுப்புகள் நடக்கும் என்று அவர் கூறினார்.
 

.