New Delhi: கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரேகானில் தலித் மற்றும் ஆதிக்க சாதியினர் இடையே நடந்த வன்முறை தொடர்பாக, மாவியிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக 5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டு வரும் மனித உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜும் கைதாகினார். புனேவைச் சேர்ந்த போலீஸ் குழு தான், 5 பேரையும் கைது செய்தது. பஞ்சாபில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜை, புனே கொண்டு செல்ல பஞ்சாப் மற்றும் ஹரியான உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், போலீஸார் அவரை கொண்டு செல்ல முயற்சித்தனர்.
“நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறியுள்ளனர். அதே நேரம் கைது செய்யப்பட்ட பெண்ணை எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற தகவலையும் போலீஸார் தெரிவிக்கவில்லை. இது தவறான செயல். நீதிமன்ற அவமதிப்பு” என சுதாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பின் நீண்ட தேடலுக்கு பிறகு, மேஜிஸ்திரேட் வீட்டின் வெளியே காரில் வைக்கப்பட்டிருந்த சுதாவைக் கண்டு அவரது வழக்கறிஞர்கள், தலைமை மேஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை சுதாவை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து சுதா வீட்டுக் அழைத்து வரப்பட்டார்.
5 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார், காந்தியின் வாழ்க்கை பற்றி எழுதிய எழுத்தாளர் ராமச்சந்திர குஹா “ காந்தி உயிரோடு இருந்திருந்தால், அவரையும் மோடி அரசு கைது செய்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.