கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
Tirunelveli, Tamil Nadu:
நெல்லையில், எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞரின் தலை 'துண்டிக்கப்பட்டு' படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜ் (23). இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு அந்த பெண்ணின் சகோதரர் செல்லசாமி, எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும், நம்பிராஜ் ரவுடிபோல் திறிந்து வருவதாக கூறி அவரை ஏற்க மறுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நம்பிராஜ் உன் எதிர்ப்பை மீறி உனது தங்கையை கடத்திச்சென்று திருமணம் செய்வேன் என அந்த பெண்ணின் சகோதரரிடம் சவால் விடுத்துள்ளார். இதையடுத்து நம்பிராஜ் சவால் விடுத்தபடி, செல்லசாமியின் சகோதரியை தூக்கிச்சென்று திருமணம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் செல்லசாமிக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எதிர்ப்பை மீறி திருமணம் செய்த நம்பிராஜ் நெல்லையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தனது மனைவியுடன் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், ஆத்திரம் அடங்காத பெண்ணின் சகோதரர் செல்லசாமி, நம்பிராஜை சமாதானம் பேசுவதாக கூறி ரயில்வே கிராசிங் அருகே அழைத்துள்ளார். செல்லசாமியின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற நம்பிராஜை ஒரு கும்பல் சரமாறியாக தாக்கி கழுத்தறுத்து கொலை செய்துள்ளது.
இதையடுத்து, நடந்த கொலையை விபத்து போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக ரயில்வே தண்டவாளத்தில் தூக்கி வீசிச் சென்றுள்ளனர். இதில், அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் நம்பிராஜ் உடலின் மீது ஏறி இறங்கியதில் அவரது உடல் நசுங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.